" ரெம்டெசிவிர், ஆக்சிஜன் ஆகியவற்றை சேமிக்காதீர்" எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் வலியுறுத்தல்
''கொரோனா பாதிப்பால் வீடுகளில் தனிமையில் இருப்போர், முன் எச்சரிக்கை என நினைத்து, ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்தை சேமிக்க வேண்டாம்,'' என, டில்லி 'எய்ம்ஸ்' மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார்.
கொரோனா பரவலின் இரண்டாம் அலை வேகம் எடுத்துள்ள நிலையில், ரெம்டெசிவிர் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்து உள்ளது. இதனால், வீடுகளில் வைரஸ் பாதிப்பால் தனிமைப் படுத்தப்பட்டு உள்ள பலரும், ரெம்டெசிவிர் மருந்து மற்றும் ஆக்சிஜனை சேமித்து வைப்பதாக தகவல் பரவியது.
இதுகுறித்து டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியதாவது,
கொரோனா பாதிப்பிற்கு உள்ளான, 85 - 90 சதவீதம் பேருக்கு, காய்ச்சல், சளி, உடல் வலி, இருமல் போன்ற சாதாரண அறிகுறிகள் மட்டுமே உள்ளன. இவர்கள், வீடுகளிலேயே தனிமைப் படுத்தப் பட்டு உள்ளனர். இவர்களுக்கு, ரெம்டெசிவிர் மருந்து தேவையில்லை.
அச்சம் காரணமாக, பலரும் தாங்களாகவே மருந்துகளை எடுத்துக் கொள்வதாக தெரிகிறது. இது ஆபத்தானது. மருத்துவமனைகளில், நோய் பாதிப்பு கடுமையாக உள்ளவர்களுக்கு மட்டுமே, ரெம்டெசிவிர் செலுத்தப்படுகிறது.
வீடுகளில் தனிமையில் இருக்கும் காலத்தில், யோகா மற்றும் சாதாரண மருந்துகள் வாயிலாக, ஏழு முதல், 10 நாட்களில் குணமடையலாம். எனவே, ரெம்டெசிவிர் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை, மக்கள் வீடுகளில் சேமித்து வைக்கவோ, தவறுதலாக பயன்படுத்தவோ வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.