விரைவில் கொரோனா வைரஸின் 3வது அலை வீசும்- எச்சரிக்கை விடுத்த ஆதித்ய தாக்கரே
நம் நாட்டில் கொரோனா வைரஸின் 3வது அலை விரைவில் ஏற்படும் என மகாராஷ்டிரா அமைச்சர் ஆதித்ய தாக்கரே எச்சரிக்கை செய்திருக்கிறார்.
முன்னணி தனியார் செய்தி நிறுவனம் நடத்திய உச்சி மாநாட்டில், மகாராஷ்டிரா சுற்றுலா மற்றும் சுற்றுப்புறச்சூழல் துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொரோனா வைரஸின் 3வது அலை விரைவில் ஏற்படக்கூடும். ஆனால் இந்த கொரோனா வைரஸின் 3ம் அலை, இரண்டாவது அலையை விட வலுவானதா அல்லது பலவீனமானதா என்பதை இப்போதே தீர்மானிக்க முடியாது. இப்போது செலுத்தப்படும் தடுப்பூசி எதிர் வரும் காலத்தில் உதவி செய்யும்.
இன்று அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட பணிக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்தான் எடுக்கப்பட்டு வருகிறது. அறிவியல் மற்றும் மருத்துவ உண்மைகளின்படி முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனா நோய் பல மாதங்களாக உருமாற்றம் அடைந்து சிக்கலாகி விட்டது. எனவே இந்த விஷத்தை பொறுத்தவரை மக்கள் சொந்தமாக முடிவுகளை எடுப்பதை விட்டுவிட்டு, மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் கருத்துக்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.