நாம் தற்போது மோசமான காலக்கட்டத்தில் உள்ளோம் - தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் எச்சரிக்கை
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. நாம் தற்போது மோசமான காலக்கட்டத்தில் இருக்கிறோம் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியும், மருத்துவருமான சவுமியா சுவாமிநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் சிறப்புப் பேட்டியில் பேசியதாவது -
கொரோனா வைரஸ் உருமாறுவது இயற்கைதான். அந்த மாற்றத்தால் மனிதர்களை வைரஸ் தாக்கும் வேகம் அதிகரிக்கிறதா? குறைகிறதா? என்பதுதான் மிக முக்கியம். உருமாற்றம் இருந்தாலும் வைரஸின் அடிப்படை மாறுவது கிடையாது.
கொரோனாவிலிருந்து தப்பிக்க, முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தலே தொற்றிலிருந்து நாம் பாதுகாப்பாக இருக்கலாம்.
கொரோனா வைரஸ் முதல் அலையின்போது நமக்கு எதுவும் தெரியாது. அதனால், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தோம். ஆனால், தற்போது கொரோனா வைரஸ் பற்றி நாம் அனைவருமே தெரிந்து கொண்டுள்ளோம். மிதமான பாதிப்பு உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைப் பெறலாம். ஆக்சிஜன் வசதி தேவைப்படுபவர்கள் மட்டும் மருத்துவமனைக்குச் செல்லலாம்.

பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசி போடுதல் மிக மந்தமாக நடந்து வருகிறது. இந்த நாடுகள் மட்டுமே அடுத்தடுத்த கொரோனா அலை குறித்து கவலைப்பட வேண்டும்.
முதல் தவணைத் தடுப்பூசி போட்டவர்கள், கொரோனா நோயால் திடீரென்று பாதிக்கப்பட்டால், அவர்கள் குணமடைந்த பிறகு கட்டாயம் 2-ம் தவணைத் தடுப்பூசிப் போட்டுக் கொள்ள வேண்டும். 6 மாதத்துக்குப் பின் 2-ம் தவணை தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.
கொரோனா வைரஸ் முதல் அலையில் முதியவர்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டார்கள். அதற்கு காரணம், அவர்களின் வயது மற்றும் இணைநோய் பாதிப்புகள்தான். எனவே, முதியவர்கள் வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது.
நாம் தற்போது மோசமான காலக்கட்டத்தில் உள்ளோம். வைரஸ் எவ்வளவு காலம் இன்னும் இருக்கப் போகிறது என்பது நாம் அறிந்து கொள்வது மிகவும் கடினம். உலக மக்கள் தொகையில் 30 சதவீத மக்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொண்டால், நோயின் தீவிரத் தன்மையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
மருத்துவர்கள், செவிலியர்கள், பிசியோதெரபிஸ்ட்கள், மனநல மருத்துவர்களை இன்னும் அதிகப்படுத்த வேண்டும்.
சத்தீஸ்கர் மாநிலத்தில், அமெரிக்காவில் உள்ள மேயோ கிளினிக் மருத்துவமனையுடன் இணைந்து ‘எக்கோ பிளாட்பார்ம்’ என்ற முறையை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கின்றனர். அங்குள்ள மருத்துவ நிபுணர்களும், இங்குள்ள மருத்துவர்களும் சிகிச்சை முறை குறித்து பரிமாறிக் கொள்கின்றனர்.
இதுபோன்ற புதிய முறைகளைப் பயன்படுத்த வேண்டும். அமெரிக்காவில் 50 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நமது நாட்டில் மிகவும் குறைவானவர்களுக்கே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதனால், நாம் அனைவரும் ஒரு வருடத்திற்குப் பிறகு முகக் கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
அரசுக்கு ரூபா 800 மில்லியன் இழப்பு : அர்ஜூன மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் IBC Tamil