வேலூரில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 பேர் பலியான சம்பவம் - மனித உரிமை ஆணையம் அதிரடி
வேலூரில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 பேர் பலியான சம்பவத்திற்கு விளக்கம் தரும்படி மருத்துவக் கல்வி இயக்குநருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வேலூர் அடுக்கம்பாறையில் அமைந்திருக்கும் அரசு மருத்துவமனையில், கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த நான்கு பேரும், பொது வார்டில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு மூன்று பேரும் மொத்தம் ஏழு பேரும் கடந்த ஏப்ரல் 19ம் தேதி உயிரிழந்தனர். ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் போனதுதான் இவர்களின் இறப்புக்கு முழு காரணம் என்று உறவினர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.
அந்த புகார் மனுவில், ஆக்சிஜன் விநியோகம் தடைப்பட்டதால் 7 பேரும் மூச்சுத்திணறி இறந்து போனார்கள் என்றும், மருத்துவர்கள் ஆம்புலன்சில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எடுத்துச் சென்று நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு கொடுத்தார்கள் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்தப் புகாரின் பேரில் மருத்துவ கல்வி இயக்குநரகம் விளக்கம் கேட்டு, அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவமனை டீன் செல்விக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்திருக்கிறது. 7 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து 2 வாரங்களுக்குள் விளக்கம் தரும்படி மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு மற்றும் மருத்துவமனை டீன் செல்வி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.