நான் உயிருடன் இருக்க மாட்டேன்! உருக்கமாக பதிவிட்ட பெண் மருத்துவர் கொரோனாவுக்கு பலி
‘உடலுக்கு மட்டும்தான் மரணம்... ஆனால் ஆத்மாவுக்கு கிடையாது’ என்று சமூகவலைத்தளத்தில் பகிர்ந்த மும்பை மருத்துவர், கொரோனாவால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் 2ம் அலை அதிவேகத்தில் பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய அரசும், மாநில அரசும் திணறி வருகின்றன. இந்நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் தற்போது ஏற்பட்டுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பலர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், மும்பை சிவ்ரி காச நோய் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரியாக இருந்தவர் மனிஷா ஜாதவ் (57). இவர் சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இவர் உயிரிழப்பதற்கு 19 மணி நேரத்திற்கு முன்பு பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அந்தப் பதிவில், ‘இதுதான் எனது கடைசி காலை. நான் இனி உங்களை இங்கே சந்திக்க மாட்டேன். அனைவரும் உங்களைக் கவனித்துக்கொள்ளுங்கள். உடலுக்குத்தான் மரணம். ஆத்மாவுக்கு இல்லை’ என்று பதிவிட்டார்.
இந்த பதிவு தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பதிவில் பலர் தங்களுடைய வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.