மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனாவால் உயிரிழந்தார்!
கொரோனா வைரஸ் 2ம் அலை இந்தியாவில் அசுர வேகத்தில் பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே சமயத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மனித உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயானங்களில் உடல்களை எரிக்க இடமில்லாமல் பிணங்கள் வரிசையில் வைக்கப்பட்டிருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பிணங்களை நதிகளிலும், ஏரிகளிலும் வீசப்பட்ட சம்பவங்களும் பீதியை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மம்தா பானர்ஜியின் சகோதரர் ஆஷிம் பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.