ஆக்சிஜனின்றி உயிருக்குப் போராடிய கணவனுக்கு வாயோடு வாய் வைத்து சுவாசத்தைக் கொடுத்த மனைவி
ஆக்சிஜன் பற்றாக் குறையால் சுவாசிக்க முடியாமல் உயிருக்கு போராடிய கணவனுக்கு தன் வாயோடு வாய் வைத்து சுவாசத்தைப் பரிமாற்றம் செய்த மனைவியின் முயற்சி தோல்வியில் முடிந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரவி சிங்கேல். இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சரோஜினி நாயுடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா தொற்று வீரியத்தால் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. செயற்கைச் சுவாசத்தின் தேவை அவருக்கு அதிகமாக தேவைப்பட்டது. அவருக்குத் தேவைப்படும் ஆக்சிஜன் கிடைக்கவில்லை.
இதனால் தனது கணவரைக் காப்பாற்ற மனைவி ரேணு சிங்கெல் வாயோடு வாய் வைத்து சுவாசத்தைப் பரிமாறினார். ஆனால் இவரது முயற்சித் தோல்வியில் முடிந்தது. ரவி சிங்கேல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து, ஆக்ரா மருத்துவ அதிகாரி பாண்டே கூறுகையில், மாவட்டம் முழுவதிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. எங்களால் முடிந்த அளவிற்கு ஆக்சிஜன் இருப்பை அதிகப்படுத்த முயற்சி செய்தோம் என்றார்.
கடைசி நிமிடம் வரை கணவரின் உயிரைக் காப்பாற்ற மனைவி எவ்வளவோ போராடியும் தோல்வியில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.