நாடெங்கும் மரண ஓலம் - இது கொரோனா 2ஆம் அலை இல்லை - இது கொரோனா சுனாமி பேரழிவு?
இந்தியாவின் தலைநகரான டெல்லி தான் கொரோனா ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டி வருகிறது.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் 300க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்து வருகிறார்கள். உயிரிழந்தவர்களைப் புதைக்கவோ, எரிக்கவோ கூட இடமில்லாமல் அவர்களின் உறவினர்கள் அல்லல்பட்டு வருகிறார்கள். ஆங்காங்கு மனித சடலத்தை தூக்கிச் செல்லும் காட்சிகளும், மக்களின் அழுகை சத்தமும் காண்போர் நெஞ்சை பதற வைக்கிறது.
கொரோனா தொற்று பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளும், குழந்தைகளை இழந்த பெற்றோர்களும், கணவனை இழந்த மனைவிகளும், மனைவியை இழந்த கணவர்களும் படும் துன்பம் கல் நெஞ்சை கூட கரைய வைத்து விடும்.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் தனியார் மருத்துவமனைகள் கூட திண்டாடி வருகின்றன. எய்ம்ஸ் உள்ளிட்ட அதிநவீன மருத்துவமனைகளிலே இது தான் நிலைமை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று முன்தினம் 25 பேர் உயிரிழந்த நிலையில், இன்று 20 பேர் பலியாகியிருக்கின்றனர். இதற்குக் காரணம் ஆக்சிஜன் கொடுக்காதது தான் என்கின்றனர். இச்சூழலில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 6 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கொரோனா இரண்டாவது அலை என்று அனைவரும் கூறுகிறார்கள். உண்மையில் இது கொரோனாவின் 2ம் அலை இல்லை. இது கொரோனா சுனாமி பேரழிவு. இந்த கொரோனா சுனாமி உச்சமடையும் நேரத்தில் அதை எதிர்கொள்ள மத்திய அரசு தேவையான மருத்துவக் கட்டமைப்புகள், மருத்துவமனைகள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருந்துகள், தடுப்பூசிகள், ஆக்சிஜன்கள் ஆகியவற்றைத் தயார் செய்ய வேண்டும். அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க தயார் என்று கூறிய மத்திய அரசு, அனைத்தையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளது.