கொரோனா தடுப்பூசி: இணையதளத்தில் முன் பதிவு செய்யும் தேதி வெளியீடு
நாடு தழுவிய மூன்றாவது கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மே 1-ம் தேதி தொடங்க உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் கொரோனாவின் 2ம் அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. கொரோனாவின் பிடியில் மக்கள் சிக்கித் தவித்து வருகிறார்கள். முதல் கொரோனா தொற்று பரவலை காட்டிலும், 2ம் கொரோனா தொற்றின் அலை அதிக வீரியம் கொண்டதாக உள்ளது.
கொத்து கொத்தாக கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய அரசும், மாநில அரசும் திணறி வருகின்றன. தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் மத்திய அரசுகள் பல்வேறு நடவடிகைகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகம் கொரோனா தடுப்பூசி தாயாரிக்கும் 2 நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்க ஒப்புதல் அளித்திருக்கிறது. இதனையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் நடந்த மருத்துவக் குழு ஆலோசனை கூட்டத்தில், 18 வயது மேற்ப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, 18 வயது மேற்பட்டவர்கள் அனைவரும் அரசு சார்ந்த கொரோனா மையங்களில் இலவசமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும், தனியார் மருத்துவமனைகளில் பணம் செலுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏப் 28-ம் தேதி முதல் cowin.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்திருக்கிறார்.
கொரோனா முன்கள பணியாளர்களுக்கும் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கும் முதலில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.