4000 ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றியது ரயில்வேத்துறை
நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால், சில மாநிலங்களில் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் மக்களுக்கு படுக்கை வசதி இல்லாமல் அல்லல்பட்டு வருகிறார்கள். இந்த பிரச்சினையை சமாளிக்க, ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை வார்டுகளாக ரயில்வேத்துறை மாற்றி வருகிறது.
இந்நிலையில், ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது -
இதுவரை 4000 பெட்டிகள் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. 16 மண்டலங்களில் இந்த பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசுகளின் கோரிக்கைக்கு ஏற்ப பெட்டிகள் வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு அனைத்து வழிகளையும் ரயில்வேத்துறை கையாண்டு வருகிறது.
மஹாராஷ்டிராவின் நந்துர்பாரில் ரயில் பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் எந்த வாய்ப்பையும் தவற விட மாட்டோம்.
800 படுக்கைகளுடன் 50 ரயில் பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டு, டெல்லியின் ஜகுர் பஸ்தி ரயில் நிலையத்திலும், 25 பெட்டிகள், ஆனந்த் விஹார் நிலையத்திலும் நிறுத்தப்பட்டிருக்கிறது. மாநில அரசுகளின் கோரிக்கைக்கு ஏற்ப நாடு முழுவதும் 3 லட்சம் படுக்கைகள், கொரோனா சிகிச்சைக்காக ஏற்பாடு செய்யப்படும் என்றார்.