அசுர வேகத்தில் பரவும் கொரோனா - பிரதமர் மோடி உத்தரவு
கொரோனாவின் 2ம் அலை அதிதீவிரமாக பரவி வரும் நிலையில், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசும், மாநில அரசும் மக்களுக்கு கட்டுப்பாடுக்களை விதித்ததோடு அல்லாமல், பள்ளிகள், கல்லூரிகள், கேளிக்கை பூக்காக்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்தையும் மூட உத்தரவிட்டன.
முழு ஊரடங்கை மத்திய அரசு அறிவித்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பிறகு கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்தது. மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்ட மத்திய அரசும், மாநில அரசும் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அறிவித்தன.
மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் தற்போது கொரோனாவின் 2ம் அலை பரவத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2ம் அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது.
ஒரு நாளைக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல் அலையை விட 2ம் அலை பன்மடங்கு வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர சுகாதாரத்துறையினர் போராடிக் கொண்டு வருகின்றனர்.
டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகமாகியுள்ளன. இதனால் அம்மாநிலங்களுக்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களில் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனை வாசலில் நோயாளிகள் காத்துக் கிடக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகி வருகிறது.சில இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அனைத்து ஆக்சிஜன் நிலையங்களிலும் அதன் கொள்ளளவுக்கு ஏற்ப உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும், ஆக்சிஜன் சிலிண்டர்களை நிரப்பும் இடங்களும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேவையான அளவுக்கு ஆக்சிஜன் கையிருப்பில் இருப்பதாக அண்மையில் தெரிவித்திருந்த சுகாதாரத்துறை, ஆக்சிஜன் சிலிண்டர்களை ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு கொண்டு செல்வதில் சிக்கல் நீடிப்பதாக தெரிவித்துள்ளது.