ஒரு தலை காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவிக்கு கத்தி குத்து - அதிர்ச்சி சம்பவம்
குன்னூரில் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிக்கு கத்தி குத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம்,குன்னூர் ஒய்எம்சி அருகே தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் வழக்கம் போல பள்ளிக்கு சென்றுள்ளார்.
அப்போது 26 வயதான ஆசிக் என்ற இளைஞர் மாணவி படிக்கும் பள்ளி அருகே மாணவியை பின்தொடர்ந்த வந்த நிலையில், திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் மாணவியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓட முயன்றார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இளைஞரை மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அப்போது, அந்த இளைஞர் மது போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது.
கத்தியால் குத்தப்பட்ட மாணவி குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும்,எதற்காக மாணவியை அந்த இளைஞர் கத்தியால் குத்தினார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய குன்னூர் காவல்துறையினர் ஆஷிக் என்ற இளைஞர், மாணவியை காதலிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும் ஆனால் அந்த மாணவி தவிர்த்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஆஷிக் கத்தியை எடுத்துச் சென்று இன்று காலை மாணவியை கத்தியால் குத்தியதாகவும் மாணவியின் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.