ஹெலிகாப்டர் விபத்து; இறந்தவர்களின் கண்ணியத்திற்கு மதிப்பளித்து யூகங்களை தவிர்க்க வேண்டும் - விமானப்படை
ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான உண்மை கண்டறியப்படும் வரை யூகங்களை தவிர்க்க வேண்டும் என விமானப்படை தெரிவித்துள்ளது.
குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியத்தில் அதில் பயணித்த முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அவர்களது உடல் டெல்லியில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து பற்றி பல்வேறு தகவல் பரவும் நிலையில் விமானப்படை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதில், ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான உண்மை கண்டறியப்படும் வரை யூகங்களை தவிர்க்க வேண்டும். விரைவாக விசாரணை நடத்தி உண்மைகள் வெளியிடப்படும்.
இறந்தவர்களின் கண்ணியத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் யூகங்களை தவிர்க்க வேண்டும். டிசம்பர் 8 அன்று நடந்த சோகமான ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணத்தை விசாரிப்பதற்காக முப்படைகளின் விசாரணைக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது என விமானப்படை தெரிவித்துள்ளது.