தமிழகத்தில் சமையல் எண்ணெய் விலை ரூ 10 வரை குறைவு - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
சமையல் எண்ணெய்கள் மீதான வரிகள் குறைக்கப்பட்டதால் அதன் விலை தமிழகத்தில் லிட்டருக்கு ரூ 10 வரை குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஓராண்டாக சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதை கட்டுப்படுத்தும் நோக்கில் கச்சா பாமாயில், கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் அடிப்படை வரியை 2.5 சதவீதத்தில் இருந்து பூஜ்யமாக அரசாங்கம் குறைத்துள்ளது.
இந்த எண்ணெய்களின் மீதான வேளாண் செஸ், கச்சா பாமாயிலுக்கு 20 சதவீதத்திலிருந்து 7.5 சதவீதம் ஆகவும், கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய்க்கு 5 சதவீதமாகவும் ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட குறைப்பின் விளைவாக, கச்சா பாமாயிலுக்கு 7.5 சதவீதம் மற்றும் கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய்க்கு 5 சதவீதம் மொத்த வரி விதிக்கப்படுகிறது.
ஆர்பிடி பாமோலின் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் அடிப்படை வரி 32.5 சதவீதத்தில் இருந்து 17.5 சதவீதம் ஆக குறைக்கப்பட்டுள்ளது.
குறைக்கப்படுவதற்கு முன், அனைத்து வகையான கச்சா சமையல் எண்ணெய்கள் மீதான வேளாண் உள்கட்டமைப்பு செஸ் 20 சதவீதம் ஆக இருந்தது.
குறைக்கப்பட்ட பிறகு, கச்சா பாமாயில் மீதான வரி 8.25 சதவீதம் ஆகவும், கச்சா சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் மீதான வரி தலா 5.5 சதவீதம் ஆகவும் இருக்கும்.
சமையல் எண்ணெய்களின் விலைகளைக் கட்டுப்படுத்த பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சோயாபீன் எண்ணெய் மீதான இறக்குமதி வரிகளை அரசு குறைத்துள்ளது,
தேசிய உற்பத்தி மற்றும் உபஉற்பத்தி பொருட்கள் இணையவழி வர்த்தக அமைப்பில் (என்சிடிஇஎக்ஸ்) கடுகு எண்ணெயின் வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சேமிப்பு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
அரசின் நடவடிக்கைகளின் காரணமாக தமிழகத்தில் ஒரு கிலோவுக்கு ரூ 10 வரை சமையல் எண்ணெய்களின் விலைகள் குறைந்துள்ளதாக நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் தெரிவித்துள்ளது.