ரிவியூ எடுங்க கேப்டன் ... கோலியை ரிவியூ எடுக்கச் சொல்லி கெஞ்சிய பந்த்... நடந்தது என்ன?

Kohli ENGvIND RISHABH PANT
By Irumporai Aug 04, 2021 01:40 PM GMT
Report

இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் ஸாக் கிராலே விக்கெட்டை வீழ்த்த கேப்டன் விராட் கோலியை ரிவியூ எடுக்கச் சொல்லி ரிஷப் பந்த் கெஞ்சிய விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் டிரென்ட் பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்ய , முதல் ஓவரிலேயே ரோரி பர்ன்ஸ் ஆட்டமிழந்ததையடுத்து, ஸாக் கிராலே களமிறங்கினார்.

அவர் 27 ரன்கள் எடுத்திருந்தபோது 20-வது ஓவரை முகமது சிராஜ் வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தில் கிராலேவை வீழ்த்த எல்பிடபில்யூவுக்கு இந்திய அணி முறையிட்டது.

நடுவர் அவுட் கொடுக்காததைத் தொடர்ந்து, இந்திய அணி ரிவியூ எடுத்தது. ஆனால், நடுவரின் முடிவே சரியானது என ரிவியூவில் உறுதியானது. இதனால், இந்திய அணி ஒரு ரிவியூவை இழந்தது.

இந்த நிலையில்அதே ஓவரின் கடைசி பந்தில் கீப்பர் கேட்ச்சுக்கு இந்திய அணி மீண்டும் முறையிட்டது. இந்த முறையும் நடுவர் அவுட் இல்லை என கூற கேப்டன் கோலி ரிவியூ எடுப்பது குறித்து சிராஜ் மற்றும் அணி வீரர்களிடம் கேட்டார்.

அப்போது உடனிருந்த கீப்பர் ரிஷப் பந்த் ரிவியூ எடுக்கச் சொல்லி கேட்டார். ஏற்கெனவே ஒரு ரிவியூவை இதே ஓவரில் இழந்ததால், மீண்டும் ரிவியூவை இழக்க வேண்டாம் என கோலி யோசித்து கொண்டே இருந்தார் ஆனாலும் பந்த் விடாப்பிடியாக ரிவியூ எடுக்கச் சொல்லி கட்டாயப்படுத்த கோலி ரிவியூ எடுத்தார் ரிவியூவில் கிராலே அவுட் என்பது உறுதியாக கோலி நிம்மதியடைந்தார்.

இந்த நிலையில் கோலியை ரிவியூ எடுக்கச் சொல்லி பந்த் கட்டாயப்படுத்தும் விடியோ தற்போது வைரலாகி வருகிறது