‘கட்சி மாறினால் வீடு புகுந்து வெட்டுவேன்..’ என்று பேசிய ADMK நிர்வாகி - போலீசரைப் பார்த்து ஓடியபோது நடந்த விபரீதம்
கட்சி மாறினால் எவனாக இருந்தாலும் வீடு புகுந்து வெட்டுவேன். மாவட்ட செயலாளர் ரவிச்சந்தின்கிட்ட சொல்லிவிட்டு வெட்டுவேன். என் வெட்டுதான் முதல் வெட்டாக இருக்கும் என்று பேசிய சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி கால் முறிந்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் கிழக்கு மாவட்டத்தில், அதிமுக சார்பில் சாத்தூர் நகர்மன்ற தேர்தல் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அம்மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது.
அப்போது அந்நிகழ்ச்சியில் சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி பேசியதாவது -
இரட்டை இலையில் போட்டியிட்டு வெற்றி பெற்று விட்டு யார் கட்சி மாறினாலும் அவர்களை வீடு புகுந்து வெட்டுவேன். அதிமுகவில் போட்டியின்றி வெற்றி பெற்று கட்சி மாறினாலும் வெட்டுவேன். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன்கிட்ட சொல்லிவிட்டு வெட்டுவேன். என் வெட்டுதான் முதல் வெட்டாக இருக்கும்.
யார் கட்சி மாறுகிறாரோ, கட்சியை வைத்து ஜெயித்துவிட்டு, கட்சி மாறுகிறார்களோ, அவருடைய போஸ்ட்மார்ட்டம் அரசு மருத்துவமனையில்தான் நடைபெறும். இப்பவே நான் சொல்கிறேன். இவ்வாறு நான் கூறியதற்காக என் மீது வழக்குப்பதிவு செய்தாலும் பிரச்சனை இல்லை. கட்சி மாற நினைப்பவர்கள் மரணத்திற்கு தயாராக இருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இவரின் சர்ச்சையாக பேசிய சண்முகக்கனியின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து, சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கொலை மிரட்டல், அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டது உள்ளிட்ட 3 பிரிவுகளில் காவல்துறை வழக்கு பதிவு செய்தனர். ஆகையால், இவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவிக் கொண்டிருந்தது.
இந்நிலையில், வழக்கு பதிவு செய்த போலீசார் சண்முகக்கனியை கைது செய்ய மேடுப்பட்டியில் உள்ள வீட்டிற்கு சென்றனர். அப்போது, போலீசிடமிருந்து தப்பிக்க வீட்டின் மாடியிலிருந்து குதித்ததில் சண்முகக்கனியின் கால் முறிந்தது.
இதனையடுத்து, கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் தற்போது சண்முகக்கனி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.