கமல் குறித்து சர்ச்சை பேச்சு - நடிகர் ராதாரவி மீது வழக்குப் பதிவு
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் குறித்து சர்ச்சையாக பேசிய நடிகர் ராதாரவி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். நடிகை நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி சர்ச்சையாக கருத்து தெரிவித்தார். அதனையடுத்து, நடிகர் ராதாரவியை திமுக கட்சி, திமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கியது. அதனையடுத்து, நடிகர் ராதாரவி “நான் கூறிய கருத்து உங்கள் மனதை முள்ளாகத் தைத்து புண்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு ராதா ரவி விளக்கம் கொடுத்தார்.
ஆனால், ராதா ரவியின் அவதூறு கருத்து அவரை அறிவு குன்றியவராக காட்டுவதாகக் கூறியுள்ள விக்னேஷ் சிவன், ராதா ரவி மீது நடவடிக்கை எடுக்கும்படி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கனிமொழி இருவருக்கும் வேண்டுகோள் விடுத்ததையடுத்து நடிகர் ராதாரவியை கட்சியிலிருந்து திமுக கழகம் நீக்கியது.
இதனையடுத்து நடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்தார். கடந்த மார்ச் 28ம் தேதி கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து நடிகர் ராதாரவி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பிரச்சாரத்தில் நடிகர் ராதாரவி பேசுகையில், தன்னை நம்பி வந்த பெண்களை காப்பாற்ற முடியாமல் கைவிட்ட கமல் எப்படி தமிழகத்தை காப்பாற்ற போகிறார்.
கமல் நேர்மையானவரா? கமல் நேர்மையற்றவர். அவர் எதற்காக அரசியலில் வந்துள்ளார் என்று தெரியுமா? அவர் கோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் வாக்குகளை பிரிக்க திமுகவின் பி டீமாக வந்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சிகள் ரூ.27 கோடி பணம் பெற்றுக்கொண்டு திமுக கூட்டணியில் உள்ளனர். காங்கிரஸ் செல்வாக்கை இழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. சுயமான பேச செய்யாதவர் ஸ்டாலின்; அவர் பேப்பரில் இருப்பதை பார்த்து படிப்பார் என்று பிரச்சாரத்தில் பேசினார்.
ராதாரவி பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை தொடர்ந்து கொச்சையாக விமர்சித்து வருவதாக பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ராதாரவி ஏற்கனவே நயன்தாரா குறித்து அவதூறாக பேசியதற்காக திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். கமல் ஹாசன் குறித்து பேசியது மக்கள் நீதி மய்யம் தொண்டர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் குறித்து அவதூறாக பேசியதற்காக கோவை பந்தய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.