தமிழக மக்களை யாராவது கட்டுப்படுத்த நினைத்தால்! ராகுல் காந்தி ஆவேசம்
தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார். இன்று தூத்துக்குடி வந்த ராகுல் காந்திக்கு, தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அப்போது அவர் பேசுகையில், தமிழ் மொழிக்கு உன்னதமான கலாச்சாரம் உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே நாகரீகம் என தெரிவித்து வருகிறார். நரேந்திர மோடி தமிழ் நாட்டின் வரலாற்றை இந்தியாவின் வரலாறாக பார்க்கவில்லையா? தமிழின் பெருமை மற்றும் பாரம்பரியத்தை இந்தியாவின் பாரம்பரியமாக பார்க்கவில்லையா? ஒரு கருத்து இந்தியாவை ஆட்சி செய்யும் என்றால் அந்தக் கருத்தை நமக்கு தேவையில்லை.
தமிழக அரசை கட்டுப்படுத்துவது போல தமிழக மக்களையும் கட்டுபடுத்த பிரதமர் நினைக்கிறார். பிரதமரின் எண்ணமும் செயலும் தவறானது. தமிழக மக்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.
தமிழகத்தை யாராவது கட்டுப்படுத்த நினைத்தால் அது முடியாது என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. நல்ல அரசையும் மக்களுக்கு நல்லதை செய்யும் அரசையும் கொண்டு வர நாம் நினைக்கிறோம் என தெரிவித்தார்.