1000வது ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்தியா - இதுவரை படைத்த வரலாறு என்ன தெரியுமா?
வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் தனது 1000வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரி 6 ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்கவுள்ளது.
இந்த போட்டியில் விளையாடுவதன் மூலம் இந்திய அணி 1000வது ஒருநாள் போட்டியில் விளையாடும் முதல் அணி என்ற சாதனையை படைக்க உள்ளது. 1971 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்திய அணி முதல் முறையாக 1974 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியை விளையாடி 4 விக்கெட் வித்தியாத்தில் தோல்வியை தழுவியது.
முதல் போட்டிக்கு அஜீத் வடேகரும், 100வது போட்டிக்கு கபில்தேவும், 200வது மற்றும் 400வது போட்டிக்கு அசாருதீனும், 300வது போட்டிக்கு தெண்டுல்கரும், 500வது போட்டிக்கு கங்குலியும், 600வது போட்டிக்கு ஷேவாக்கும், 700, 800, மற்றும் 900வது போட்டிகளுக்கு டோனியும் கேப்டனாக இருந்துள்ளனர். இன்றைய போட்டிக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட உள்ளார்.
இந்த 1000 ஒருநாள் போட்டிகளின் முடிவில் அதிக போட்டிகள், ரன்கள், அதிக சதங்கள் என எதில் பார்த்தாலும் சச்சின் டெண்டுல்கரின் பெயர் தான் முதலிடத்தில் உள்ளது. சச்சின் டெண்டுல்கர் கடந்த 1989ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடிய 166வது ஒருநாள் போட்டியில் அறிமுகமாக களமிறங்கினார்.
அன்றில் இருந்து ஓய்வு பெற்ற 2012 ஆம் ஆண்டு வரை இந்தியா 638 போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்த காலகட்டங்களில் இந்தியா 72.57% ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அத்துடன் அவர் ஓய்வு பெற்றபோது இந்தியா விளையாடிஇருந்த ஒட்டுமொத்த ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே 57.58% போட்டிகளில் விளையாடியிருந்தார்.
இதனால் தான் சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் காலத்தால் அழிக்க முடியாத ஒரு காவிய தலைவன் என்று புகழப்படுகிறார்.