கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டத்தைக் கொண்டுவருவோம் : கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

Basavaraj Bommai Karnataka CM AntiConversion Act
By Irumporai Sep 29, 2021 06:43 AM GMT
Report

கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டத்தைக் கொண்டுவருவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இது குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் அளித்த பேட்டியில்:

கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்களில் இந்துக்கள் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. காதல், திருமணம் ஆகிய காரணங்களுக்காகவும் மதமாற்றம் செய்யப்படுவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

இத்தகைய கட்டாய மதமாற்றத்தை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது. மதமாற்றங்களை தடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். கட்டாய மதமாற்றத்தைத் தடுக்கும் வகையில் கர்நாடகாவில் விரைவில் மதமாற்ற தடை சட்டம் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.

இதுகுறித்து சட்ட நிபுணர்கள், மடாதிபதிகள், பிற மதங்களின் தலைவர்கள் ஆகியோரிடம் அரசு கருத்து கேட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா இது தொடர்பான‌ சட்ட வரைவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். முழுமையான வரைவு கிடைத்தவுடன், அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்படும்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் இதுவரை மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டம் அமலில் உள்ளது கடைசியாக குஜராத்தில் தான், குஜராத் மதச் சுதந்திரச் சட்டம் 2021 அமலில் உள்ளது.