பரந்துார் விமான நிலையம் அமைவது உறுதி - அமைச்சர் எ.வ.வேலு

Government of Tamil Nadu E. V. Velu
By Thahir Aug 31, 2022 07:41 AM GMT
Report

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதில் தமிழக அரசு தெளிவாக , உறுதியாக இருக்கிறது.

அமைச்சர் நேரில் ஆய்வு 

சேலம் 8 வழி சாலை அமைப்பது தொடர்பாக திமுக நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை, தமிழகத்தில் 10 சுங்கச்சாவடிகளை குறைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கரிசல் எழுத்தாளர் கி.ரா.வுக்கு ரூ.1.5 கோடி மதிப்பில் நினைவரங்கம், அவரது சிலை மற்றும் நூலகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இப்பணிகளை இன்று தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அப்போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ. கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் கி. செந்தில் ராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன் ஆகியோர் உடனிருந்தனர்.

விமான நிலையம் கட்டாயம் அமையும்

பின்னர் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறும்போது, கி.ரா. நினைவு மண்டபம் அமைக்கும் பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும், பரந்தூர் விமான நிலையம் அமைப்பதில் தமிழக அரசு தெளிவாக இருக்கிறது.

E. V. Velu

பரந்தூர் மக்களை வஞ்சிக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை கிடையாது .11 இடங்களில் தேர்வு செய்து அதில் 4 இடங்கள் முடிவு செய்யப்பட்டு, இறுதியில் பரந்தூர் இறுதி முடிவு செய்யப்பட்டது.

மேலும் நிலங்களுக்கு மூன்றை மடங்கு விலை கொடுப்பது, வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுப்பது,விமான நிலையம் அருகே தான் அவர்களை குடி அமர்த்துவோம்.வீடு கட்ட பணமும் தருகிறோம்.. அந்த மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர முதல்வர் தயாராக உள்ளார்.

அப்பகுதி மக்களுக்கு உதவி செய்ய வேண்டும், விமான நிலையம் வர வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.சேலம் 8 வழிச்சாலை அமைப்பதில் விவசாயிகள் மத்தியில் அதிருப்தி உள்ளது.

விவசாயிகளிடம் கலந்து ஆலோசனை நடத்தி விட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை போடுவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, அழைத்து பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது மாற்றுவழி காண வேண்டும் என்று அதிமுக ஆட்சியின் போது எதிர்கட்சித் தலைவராக இருந்த போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அதே நிலைப்பாடு தான் இன்றைக்கும் உள்ளது . அப்பகுதி விவசாயிகள், மக்களை அழைத்து பேசி வருகிறது திமுக அரசு என்றும், சாலை போடக்கூடாது என்று அரசு சொல்லாது, சேலம் 8 வழிச்சாலை என்பது அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

அமைச்சர் நான் எதுவும் தனியாக எடுக்க முடியாது.அரசின் சார்பாக தரமான கட்டுமான கட்டிடங்களை கட்டப்பட்டு வருகிறது. தரமில்லமால் இருந்தால் சம்பந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி பிரச்சினை தொடர்பாக மத்திய அமைச்சருக்கு கோரிக்கை வைத்து வருகிறேன். தமிழகத்தில் 10 சுங்கச்சாவடிகளை குறைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

தமிழகத்தில் பெய்யாத மழை பெய்து வருகிறது.. வெயில் காலத்தில் கூட திமுக ஆட்சியில் மழை பெய்து வருகிறது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை பெய்தால் சாலைகள் சேதம் அடைவது வழக்கம். இருந்த போதிலும் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.