திமுக கூட்டணியில் வெறும் 6 தொகுதிகளா? கொந்தளித்த விசகவினர்.. அமைதிப்படுத்திய திருமா
சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிமுக கூட்டணியில் பாமக 23 இடங்களை உறுதி செய்துள்ளது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 5 இடங்களும் மனித நேய மக்கள் கட்சி 2 இடங்களும் பெற்றுள்ளன. வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி இறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து சுமூகமாக நடைபெற்று வருவதாக கூட்டணி கட்சிகள் தெரிவித்து வருகின்றன. திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை விசிக புறக்கணித்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் அந்த செய்தியை திருமாவளவன் மறுத்துள்ளார். இன்று அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை விசிக மேற்கொள்ள இருக்கிறது.
அதே சமயம் திமுக கூட்டணியில் இரண்டு இலக்கங்களில் தொகுதிகள் கேட்ட விசிகவிற்கு வெறும் 6 இடங்கள் மட்டுமே வழங்க தயாராக இருப்பதாக தகவல் வந்தன. இதனை அறிந்த விசிகவினர் 6 இடங்களுக்கு ஒப்புக்கொள்ள கூடாது என கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய திருமாவளவன், “கட்சியின் நலனையும் சூழலையும் கருத்தில் கொண்டு தான் முடிவெடுப்போம்.
அந்த முடிவுகள் சில நேரங்களில் மன உளைச்சலைத் தந்தாலும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். தலைமையின் முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.
இந்த நிலையில் இன்று திமுக - விசிக இடையே கூட்டணி உடன்படிக்கை கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த வாரம் வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ளதால் இந்த வாரத்திற்குள் கூட்டணி மற்றும் வேட்பாளர் தேர்வு இறுதி செய்யப்பட வேண்டிய கட்டாயத்தில் அரசியல் கட்சிகள் உள்ளன.