தன் உயிரைக் கொடுத்து இருவரின் உயிரை காப்பாற்றிய காவலர் - ஆந்திராவில் நெகிழ்ச்சி சம்பவம்

andhrapradesh floodrescue
By Petchi Avudaiappan Nov 21, 2021 04:53 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

ஆந்திராவில் வெள்ள நீரில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தந்தை, மகனை காப்பாற்றிய காவலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா என தென்மாநிலங்கள் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஆந்திராவில் இரண்டு வார காலமாக பெய்வரும் மழையின் காரணமாக வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 

அங்குள்ள சித்தூர், கடப்பா, நெல்லூர் மற்றும் அனந்பூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மழை காரணமாக இதுவரை 24 பேர் உயிரிழந்ததாக அரசு அறிவித்துள்ளது. மீட்பு நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 7 குழுக்கள், மாநில பேரிடர் மீட்பு படையின் 9 குழுக்கள்  ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் நெல்லூர் மாவட்டத்தின் தம்மரமடுகு எனும் பகுதியில் தந்தை, மகன் இருவர் வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக மாநில பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் ஸ்ரீனிவாசராவ் அங்கம் வகிக்கும் மாநில பேரிடர் மீட்பு குழு அங்கு விரைந்தது. அப்போது மின்கம்பத்தை பிடித்தவாறு தந்தை, மகன் இருவரும் உயிருக்கு போராடியதை பார்த்த மீட்புப் படையினர் உடனடியாக படகு மூலம் அப்பகுதிக்கு சென்று மின்கம்பத்தில் ஏறி நின்று கொண்டிருந்த இருவரையும் மீட்டு தங்கள் படகுக்கு கொண்டு வந்தனர்.

அப்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடியதில்  ஸ்ரீநிவாசவராவின் லைஃப் ஜாக்கெட் கழன்றது, இதில் நிலைகுழைந்து போன காவலர் ஸ்ரீநிவாசவராவ் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். தங்களின் உயிரைக் காப்பாற்றிவிட்டு காவலர் ஸ்ரீநிவாசவராவ் உயிரிழந்ததை பார்த்த தந்தை, மகன் கதறி அழுதனர். மீட்புப் படையில் வீரமரணம் அடைந்த காவலர் ஸ்ரீநிவாசவராவுக்கு சுனிதா என்ற மனைவியும், 18 மாதங்களே ஆன மோக்‌ஷக்னா என்ற மகனும் உள்ளனர்.

உயிரிழந்த ஸ்ரீநிவாசவராவின் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரின் இந்த செயல் ஆந்திர மாநில மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.