பசிப்பதாக கூறி பணம் கேட்ட 6 வயது சிறுவன் கொலை - போலீஸ் அதிகாரி கைது
மத்தியப்பிரதேசத்தில் பசிப்பதாக கூறி உணவுக்கு பணம் கேட்ட 6 வயது சிறுவன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் டாடியா மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அம்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த மே 5 ஆம் தேதி ஆறு வயது சிறுவன் யாரோ ஒருவரால் கடத்தப்பட்டு காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தார்.
இதனடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்து வந்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது பஞ்சசீல் நகர் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியில் சந்தேகத்திற்கு இடமான கார் ஒன்றை பார்த்துள்ளனர்.
தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த கார் குவாலியரின் போலீஸ் பயிற்சிப் பள்ளியில் பணியாற்றி வந்த தலைமை காவலர் ரவி ஷர்மாவினுடையது என தெரிய வந்தது. இதையடுத்து ரவி ஷர்மாவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் சம்பவ தினத்தன்று டாடியாவுக்கு ரத யாத்திரையின் பாதுகாப்பு பணிக்காக ரவி ஷர்மா அனுப்பப்பட்டதாகவும், அடையாளம் காணப்பட்ட அந்த வாகனத்தில் மேலும் இரண்டு போலீஸ்காரர்களுடன் குவாலியருக்கு திரும்பியதாகவும் கூறியுள்ளார்.
தனக்கு மன உளைச்சல் இருப்பதாகக் கூறிய ரவி ஷர்மா, தன்னிடம் சிறுவன் உணவுக்காக பணம் கேட்டபோது பொறுமை இழந்து கழுத்தை நெறித்து கொன்றதாகவும் கூறியதாக டாடியா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமன்சிங் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
சிறுவனின் உடலை காரின் பின்புறத்தில் வைத்து டாடியாவில் இருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் உள்ள குவாலியர் நகரில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வீசிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள ரவி ஷர்மாவை உடனடியாக பணிநீக்கம் செய்யுமாறு மாநில காவல்துறை தலைமையகத்திற்கு அமன்சிங் ரத்தோர் கடிதம் எழுதியுள்ளார்.