திருச்சி அருகே ஓடும் ரயிலை கவிழ்க்க சதி - பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

Tiruchirappalli
By Thahir Jun 03, 2023 07:48 AM GMT
Report

திருச்சி அருகே தண்டவாளத்தின் குறுக்கே லாரி டயர் வைத்து ரயிலை கவிழ்க்க சதி நடந்த சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் தண்டவாளத்தில் லாரி டயர் 

கன்னியாகுமரியிரில் இருந்து சென்னை நோக்கி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று வழக்கம் சென்று கொண்டிருந்தது. திருச்சிக்கு நள்ளிரவு 12.31 மணிக்கு வந்த அந்த ரெயில் 12.45 மணிக்கு விருத்தாசலம் நோக்கி புறப்பட்டது.

இந்த ரெயிலில் என்ஜின் டிரைவராக ரகுராமன், உதவி என்ஜின் டிரைவராக வினோத் ஆகியோர் பணியில் இருந்தனர். நள்ளிரவு 1.05 மணிக்கு திருச்சியில் இருந்து சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவில் சமயபுரம் அருகே உள்ள வாளாடி ரெயில் நிலையத்தை கடந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் மேளவாளாடி பகுதியில் வந்துகொண்டிருந்தது.

Conspiracy to overturn a running train near Trichy

அப்போது, தண்டவாளத்தின் நடுவில் கருப்பு நிறத்தில் தடுப்பு போன்று பொருட்கள் இருந்ததை என்ஜின் டிரைவர் கவனித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ரெயிலை நிறுத்த முயன்றார். இதனால் பயணிகள் இருந்த பெட்டிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், ரெயிலை மேற்கொண்டு இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அச்சமடைந்த பயணிகள்

திடீரென பெட்டிகள் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும், திடீரென ரெயில் நடுவழியில் நின்றதாலும், தூங்கிக்கொண்டு இருந்த பயணிகள் திடுக்கிட்டு கண் விழித்தனர். மேலும் இருள் சூழ்ந்திருந்ததை கண்டு அச்சம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் கீழே இறங்கி வந்தனர். மேலும் ரெயில் என்ஜின் டிரைவரும், உதவியாளரும் கீழே இறங்கி பார்த்தனர். அப்போது, லாரி டயரில் ஒன்று மட்டும் என்ஜினுக்கு அடியில் சிக்கி இருந்தது.

போலீசார் விசாரணை 

படுக்கை வசத்தில் கிடந்த டயர் அதே இடத்தில் கிடந்தது. யாரோ மர்ம நபர்கள் சதிச்செயலில் ஈடுபடும் வகையில் தண்டவாளத்தில் லாரி டயரை வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது.

உடனே என்ஜின் டிரைவர் அருகில் உள்ள வாளாடி ரெயில் நிலைய அதிகாரிக்கும், ரெயில் மேலாளருக்கும் நடந்த சம்பவம் பற்றி தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் ரயிலில் ஏற்பட்ட பாதிப்பு சரிசெய்யப்பட்டு ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் நெல்லை, முத்துநகர் விரைவு ரயில்கள் தாமதமாக சென்றன.