திருப்பத்துார் அருகே ரயிலை கவிழ்க்க சதியா? தண்டவாளத்தில் இருந்த கல் மீது மோதிய ரயில்
ஆம்பூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் மர்ம நபர்கள் கல் வைக்கப்பட்ட இடத்தில் சேலம் உட்கோட்டம் ரயில்வே டி.எஸ்.பி பெரியசாமி தலைமையிலான 12 பேர் கொண்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில் கடக்கும் போது பயங்கர சத்தம்
மைசூரில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு 9 மணிக்கு காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது அதிகாலை 3.30 மணி அளவில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் பச்சகுப்பம் இடையில் வீரவர் கோவில் என்ற இடத்தில் ரயில் கடந்து செல்லும் போது பயங்கரம் சத்தம் கேட்டு ரயில் லோகோ பைலட் ரயிலை பச்சகுப்பம் ரயில் நிலையத்தில் நிறுத்தி சம்பவம் தொடர்பாக ரயில்வே நிலையம் நிலைய அதிகாரி மற்றும் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் தமிழரசி தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
ரயில்வே பாதுகாப்பு படை தீவிர விசாரணை
அப்போது ரயில்வே தண்டவாளம் அருகில் மிகப் பெரிய கல் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து கோவை எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக ரயில்வே பாதுகாப்பு படை மோப்ப நாய் பயிற்சியாளர் ராபின் மற்றும் ஜான்சி என்ற மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டு விசாரணை தொடங்கினர்.
மேலும் சேலம் ரயில்வே உட்கோட்டம் ரயில்வே பாதுகாப்பு படை டி.எஸ்.பி பெரியசாமி தலைமையில் 12 பேர் கொண்ட ரயில்வே போலீசார் சம்பவம் இடத்தில் விரைந்து சென்று அருகில் உள்ள கடைகள் மற்றும் கோயில் பூசாரியிடம் விசாரணை மேற்கொண்டு தொடர்ந்து சுற்று வட்டார கிராமங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில்வே தண்டவாளங்களில் அடிக்கடிக்கு இது போன்ற சம்பவங்களை நடைபெறாமல் இருக்க ரயில்வே துறையினர் ரயில் தண்டவாளம் பகுதியில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அப்போது தான் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களை எளிதாக கண்டுபிடிக்க முடியும், அசம்பாவிதங்களை தவிர்க்க முடியும் என்று சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.