நேரில் சென்று ஆறுதல் கூறிய சீமான் - கலங்கி நின்ற ஓபிஎஸ்
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நேற்று முன்தினம் இரவு காலமானார்.
நேரில் சென்று ஆறுதல் கூறிய சீமான்
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஓபிஎஸ்சின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள்(96). இவருக்கு கடந்த 23-ம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து, தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பழனியம்மாள் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் உயிரிழந்தார்.
அவரின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேனியில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்சின் இல்லத்துக்கு நேற்று இரவு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினார்.
வருந்திய சீமான்
மேலும் உயிரிழந்த பழனியம்மாளின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் சில நிமிடங்கள் ஓபிஎஸ்சுடன், சீமான் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஓபிஎஸ்சின் இளைய மகன் ஜெயபிரதீப்பும் உடனிருந்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “ முன்னாள் முதலமைச்சர் ஒபிஎஸ்சின் தாயார் பழனியம்மாள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன். உடனடியாக வரவேண்டும் என்றுதான் நினைத்தேன், ஈரோடு இடைத்தேர்தல் இறுதிகட்ட பரப்புரையில் இருந்ததால் வர இயலவில்லை. எனவே உடனடியாக போனில் அழைத்து ஆறுதல் கூறினேன். பரப்புரை முடிந்தப் பின்னர் இங்கு வந்து ஆறுதல் கூறினேன்” என தெரிவித்தார்.