12 ஆம் வகுப்பு தேர்வை எழுதிய தலை ஒட்டிப்பிறந்த சகோதரிகள் - பொதுமக்கள் நெகிழ்ச்சி
தெலங்கானாவில் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் தங்களுடைய 12 ஆம் வகுப்பு தேர்வை எழுதி வருவது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை அடுத்துள்ள வாரங்கல் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழில் செய்யும் தம்பதிக்கு தலை ஒட்டிய நிலையில் பிறந்த இரண்டு பெண் குழந்தைகள் வாணி மற்று வீணா உள்ளனர். தலையில் செல்லும் ரத்தநாளங்களில் பிரச்னை உள்ளதால் இவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்து பிரிக்க இயலாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
அதை தொடர்ந்து தங்களால் இவர்களை வளர்க்க முடியாது எனக் கூறிய பெற்றோர் அவர்களைக் கைவிட்ட நிலையில் இருவரும் காப்பகத்தில் வளர்ந்து வருகின்றனர். இதனிடையே வாணியும், வீணாவும் தற்போது 12 ஆம் வகுப்பு தேர்வை எழுதி முடித்துள்ளனர்.
அதேசமயம் தெலங்கானா அரசு இவர்களுக்குத் தேர்வறையில் சலுகைகள் அளித்திருந்தாலும் சலுகைகள் எதுவும் வேண்டாம் எனவும், தங்களுடைய படிப்பிற்கான கையேட்டை தாங்கள் இருவரும் படித்துள்ளதாக கூறி தவிர்த்துள்ளனர். மேலும் தேர்வு எழுத தங்களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் நேர சலுகையையும் மறுத்த வாணி, வீணா தேர்வு நேரத்திற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பாகவே தேர்வை முடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.