என்.ஆர் காங்கிரஸ் அவசர ஆலோசனை: புதுச்சேரி அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள்
என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட அவரச ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.பாஜக உடனான பல கட்ட பேச்சுவார்த்தைகளிலும் எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில் இந்த அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. கடந்த மாதம் நாராயணசாமி அரசு கவிழ்ந்ததில் இருந்து புதுச்சேரி அரசியலில் பல அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்கள் பாஜகவிலும் என்.ஆர். காங்கிரசிலும் இணைந்து வந்தனர். திமுக காங்கிரஸ் இடையே ஆன பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் குழப்பங்கள் நீடித்து வருகிறது. கடந்த தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் அதிமுக ஒரு கூட்டணியிலும் பாஜக தனித்தும் போட்டியிட்டன.
இந்த தேர்தலில் மூன்று கட்சிகளும் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரங்கசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள பாஜக தயங்குவதாக கூறப்படுகிறது. மேலும் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் நமச்சிவாயத்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த பாஜக திட்டமிட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த என்.ஆர்.காங்கிரஸ் தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக பாஜக தெரிவித்து வந்தது.. ஆனால் பேச்சுவார்த்தைகளில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் தற்போது என்.ஆர்.காங்கிரஸ் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
இதில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
ரங்கசாமியின் முடிவிற்காக தேசிய ஜனநாயக கூட்டணி காத்திருக்க கூடாது என பாமக தெரிவித்துள்ளது.