கச்சத்தீவு விவகாரம்: அண்ணாமலை இதற்கு தயாரா..? செல்வப்பெருந்தகை சவால்!
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக அண்ணாமலைக்கு சவால் விடுத்துள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.
செல்வப்பெருந்தகை
கோவை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கோவை கணபதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது பேசிய செல்வப்பெருந்தகை "இந்தியா கூட்டணிக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் எழுச்சியோடு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர். பிரதமர் மோடி தேர்தல் அறிக்கையில் சொன்ன எந்த வாக்குறுதியையுமே நிறைவேற்றவில்லை.
ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் சொன்னதில் 80 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். இந்த நாட்டை குட்டிச்சுவராக்க பாஜக துடித்துக்கொண்டு இருக்கிறது.
அண்ணாமலைக்கு சவால்
இந்த தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை எது சொன்னாலும் பொய் தான். அண்ணாமலையும் கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசி வருகின்றனர். இந்திராகாந்தி தேசநலனுக்காகவும், நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் வாழ்ந்தவர்.
அவரை பிரதமர் மோடியும், அண்ணாமலையும் கிண்டல் செய்கின்றனர். வெஜ் பேங் என்ற ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என அண்ணாமலை படித்து தெரிந்து கொள்ளட்டும். 1976-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி கச்சத்தீவுக்கு ஒரு ஒப்பந்தம்.
வெஜ் பேங்குக்கு ஒரு ஒப்பந்தம் என்று 2 ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது. அந்த ஒப்பந்தம் பற்றி தெரிந்து கொண்டு அண்ணாமலை பேச வேண்டும். அதுதொடர்பாக என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என்று சவால் விடுத்துள்ளார்.