தவெக கூட்டணிக்கு அழைத்த விஜய்யின் தந்தை எஸ்ஏசி - காங்கிரஸ் சொன்ன பதில்
காங்கிரஸை தவெக கூட்டணிக்கு அழைத்த விஜய்யின் தந்தை எஸ்ஏசிக்கு காங்கிரஸ் பதிலளித்துள்ளது.
கூட்டணிக்கு அழைத்த விஜய்யின் தந்தை
2026 சட்டமன்ற தேர்தலுக்கு திமுக, அதிமுக வலுவான கூட்டணியை உருவாக்கி, தொகுதி பங்கீடு குறித்து பேசி வரும் நிலையில், ஆட்சியில் பங்கு எனக்கூறியும் எந்த கட்சியும் விஜய்யின் தவெக உடன் கூட்டணிக்கு வரவில்லை.

அதேவேளையில், காங்கிரஸ் கட்சியில் ஒரு தரப்பினர், தவெக உடன் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
இப்படியான சூழலில், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வெளிப்படையாக காங்கிரஸ் கட்சியை தவெக உடன் கூட்டணி வைக்க அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "ஜனநாயகன் ஏன் ரிலீஸ் ஆகவில்லை இதில் அரசியல் இருக்கா, இல்லையானு எல்லோருக்கும் தெரியும். ரூ.5,000 கொடுத்தாலும் ஓட்டு அங்கேதான் போடுவோம் என்கிறார்கள் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
கட்சி ஆரம்பித்து போராட வரும் விஜய்க்கு எவ்வளவு எதிர்ப்புகள் இருந்தாலும் பயம் இல்லை. எனக்கும் எந்த பயமும் கிடையாது. என்னுடைய ரத்தம் விஜய்க்கும் பயம் கிடையாது.
காங்கிரஸ் கட்சிக்கு என்று ஒரு பாரம்பரியம் உள்ளது. அப்படி வரலாறு உள்ள ஒரு கட்சி மற்ற கட்சிக்கு ஆதரவு கொடுத்து கொடுத்து அந்தக் கட்சி இன்று தேய்ந்து விட்டது. அவர்களுக்கு இன்று பவர் இல்லை.
அந்த பவரை நாங்கள் கொடுக்கிறோம் என விஜய் கூறுகிறார். அந்தப் பவருக்கு காங்கிரஸ் வந்தால் காங்கிரஸ் மீண்டும் வரலாறு படைக்கும்" என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் பதில்
எஸ்.ஏ.சந்திரசேகரின் இந்த அழைப்பிற்கு பதிலளித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, "நாங்கள் ஏற்கெனவே பூஸ்டில்தான் இருக்கிறோம்.

ராகுல் காந்தி எங்களுக்கு பூஸ்ட், ஹார்லிக்ஸ், போன்வீட்டா ஆகியவற்றை கொடுத்திருக்கிறார். இருப்பினும் எங்களுக்கு பூஸ்ட் கொடுக்கிறேன் என்று சொன்னதுக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.
திமுக - காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தற்போது வரை தலைமை கூட்டணியை உறுதி செய்துள்ளது. இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திமுக எம்பி கனிமொழி சந்தித்து பேசியுள்ளார்.