பிரதமர் பிழைத்தார்; என் சகோதரி வாரணாசியில் போட்டியிட்டிருந்தால்.. - ராகுல் காந்தி எச்சரிக்கை!
தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் ரேபரேலி தொகுதிக்கு ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
ராகுல் காந்தி
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 3-வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் வென்றார்.
இந்நிலையில் அந்த தொகுதிக்கு தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் இன்று ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் "இந்த முறை காங்கிரஸ் கட்சி அமேதி, ரேபரேலி, உத்தர பிரதேசம் மற்றும் நாடுமுழுவதும் ஒற்றுமையாக போராடியது.
அயோத்தியை இழந்தது
ஒட்டுமொத்த நாட்டின் அரசியலையும் மாற்றிவிட்டோம் என பொதுமக்கள் செய்தி அனுப்பியுள்ளனர். நாட்டின் பிரதமர் அரசியல் சட்டத்தை தொட்டால், மக்கள் அவரை என்ன செய்வார்கள் என்று பாருங்கள்.
பாஜக அயோத்தி தொகுதியை இழந்தது. அயோத்தியில் மட்டுமல்ல, வாரணாசியிலும் பிரதமர் பிழைத்தார். வாரணாசியில் என் சகோதரி போட்டியிட்டிருந்தால் பிரதமர் 2 முதல் முதல் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பார்" என்று தெரிவித்துள்ளார்.