அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை காப்பாற்ற இந்தியா கூட்டணி போராடுகிறது - ராகுல் காந்தி!
அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற இந்தியா கூட்டணி போராடுகிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி
பீகாரின் பகல்பூரில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் "பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். இணைந்து நாட்டின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க முயற்சிக்கிறது.
ஆனால், அதை தடுத்து அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற இந்தியா கூட்டணி போராடுகிறது. நாட்டின் ஏழைகள், தலித் மக்கள், பழங்குடியினர் பெற்ற பலன்கள் அனைத்தும் அரசியலமைப்பால் கிடைத்தவை.
அக்னிவீர் திட்டம் ரத்து
அரசியலமைப்பு அழிந்துவிட்டால் பலன்கள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும். மோடியின் ஆட்சியில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறிக்கொண்டிருக்கின்றனர்.
நாட்டின் 70 சதவிகித மக்கள் வைத்துள்ள மொத்த வளத்திற்கு சமமான வளத்தை நாட்டின் 22 பேர் வைத்துள்ளனர். இதை நாங்கள் மாற்ற நினைக்கிறோம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அக்னிவீர் திட்டம் ரத்து செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.