பேரறிவாளன் விடுதலை - வாயில் வெள்ளை துணி கட்டி காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!
பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து தமிழக காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சென்னை சத்திய மூர்த்தி பவனில் வாயில் வெள்ளை துணியை கட்டிகொண்டும், கையில் பதாகைகளை ஏந்திக்கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவத்து வந்த பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரிய வழக்கில் வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த வாரம் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.
இதனை தொடர்ந்து நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு, ஆளுநர் 161வது பிரிவில் முடிவெடுக்க தாமதப்படுத்தியதால் 142 சட்டப்பிரிவை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்வதாக உத்தரவிட்டனர்.
பேரறிவாளன் விடுதலையை பல அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்று கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வரும் நிலையில், பேரறிவாளன் விடுதலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும், பேரறிவாளன் விடுதலையை கண்டித்து இன்று வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை அறப்போராட்டம் நடத்த கட்சியினருக்கு கே.எஸ்.அழகிரி நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து தமிழக காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சென்னை சத்திய மூர்த்தி பவனில் வாயில் வெள்ளை துணியை கட்டிகொண்டும், கையில் பதாகைகளை ஏந்திக்கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், பேரறிவாளனின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை, தமுக்கம் மைதானம் நேரு சிலை முன்பாக வாயில் வெள்ளை துணி கட்டிக்கொண்டு, எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருவது குறிபிடத்தக்கது.