விவசாயிகளை கொலை செய்தவரை ஏன் கைது செய்யவில்லை ? - மோடிக்கு பிரியங்கா காந்தி சரமாரி கேள்வி

congress pmmodi priyankagandhi
By Irumporai Oct 05, 2021 06:48 AM GMT
Report

உத்தர பிரதேச மாநிலம், லகிம்புர்கேரி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் ஏற்றியதில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் விவசாயிகள் மீது மோதிய காரில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த கொடூர சம்பவத்திற்கு நாடு முழுவதும் இருந்து கண்டன குரல்கள் வலுத்ததைத் தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் மகன் மீது உத்தர பிரதேச போலிஸ் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளது.

முன்னதாக இந்த சம்பவம் அறிந்த உடனே காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பன்வீர்பூர் கிராமத்திற்குச் சென்றார். அப்போது அவரை கிராமத்தின் எல்லையிலேயே உத்தர பிரதேச போலிஸார் தடுத்தி நிறுத்தி கைது செய்து தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.

உத்தர பிரதேச போலிஸாரின் தடுப்பு காவலில் கிட்டத்தட்ட 28 மணி நேரமாகப் பிரியங்கா காந்தி உள்ளார். இந்நிலையில் விவசாயிகள் மீது கார் ஏற்றிய நபரை இதுவரை ஏன் கைது செய்யவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், எந்த உத்தரவும், எப்.ஐ.ஆரும் இன்றி கடந்த 28 மணி நேரமாக மோடி அரசு என்னை தடுப்புக்காவலில் வைத்துள்ளது. ஆனால் லகிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றிய நபரை இதுவரை கைது செய்யாமல் இருப்பது ஏன்? என பதிவிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.