100 கிலோ லட்டுக்கு ஆர்டர் கொடுத்த காங்கிரஸ் - தேர்தல் முடிவுக்கு வெயிட்டிங்
தேர்தல் வெற்றியை கொண்டாட 100 கிலோ ஆர்டர் கொடுத்த காங்கிரஸ் கட்சியினர்.
வாக்கு எண்ணிக்கை
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடபெறுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் பெரும்பாலும் பாஜக மத்தியில் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளது.
ஆனால் இந்தியா கூட்டணியினர், கருத்துக்கணிப்பு போலியானது என்றும், 295 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று நாங்களே ஆட்சி அமைப்போம் என கூறி வருகின்றனர்.
லட்டு ஆர்டர்
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் அம்மாநில காங்கிரஸ் தலைமை, 100 கிலோ லட்டுக்கு ஆர்டர் கொடுத்து வெற்றியை கொண்டாட தயாராக உள்ளது. இந்த முறை காங்கிரஸ் கண்டிப்பாக இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கையில் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் அவ்நீஷ் பண்டேலா லட்டு ஆர்டர் கொடுத்துள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் மோகன் யாதவ் தலைமையிலான பாஜகவே ஆட்சியில் உள்ளது. அங்குள்ள 29 இடங்களிலும் பாஜகவே வெற்றி பெறும் என இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 29 தொகுதிகளில் 28 தொகுதிகளில் பாஜக, 1 தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.