உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இதெல்லாம் கிடைக்கும்...!

Priyanka Gandhi Uttarpradesh assembly election Congress election manipulation
By Petchi Avudaiappan Dec 09, 2021 12:12 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

உத்தரப்பிரதேச தேர்தலை முன்னிட்டு பெண்களுக்கான பிரத்யேக தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், மாநில பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ளார். 

உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு (2022) சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தொடங்கி விட்டது.

பெண்களை முக்கியமாக வைத்து இந்த தேர்தலை காங்கிரஸ் கட்சி சந்திக்க உள்ளது. அந்தவகையில், பெண்களை கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை கட்சியின் பொதுச்செயலாளரும், மாநில பொறுப்பாளருமான பிரியங்கா ஏற்கனவே வெளியிட்டு வந்தார்.

இதன் தொடர்ச்சியாக பெண்களுக்கான தேர்தல் அறிக்கை ஒன்று தனியாக தயாரிக்கப்பட்டு உள்ளது.

‘சக்தி விதான்’ என அழைக்கப்படும் அந்த அறிக்கையில் உள்ள விவரங்களை பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒரு கட்சி, பெண்களை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். இன்றைய பெண்கள் தங்களுக்காக போராட விரும்புகிறார்கள். அந்த உணர்வை மனதில் வைத்தே இந்த அறிக்கை தயாரிக்கப்படடு உள்ளது.

பெண்களுக்கான தேர்தல் அறிக்கை சுய மரியாதை, தற்சார்பு, கல்வி, மரியாதை, பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் என 6 பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், அரசு பணிகளில் பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். இதைப்போல போலீஸ் துறையில் 25 சதவீதம் பெண்களுக்கு பணி வழங்கப்படும்.

தேர்தலில் போட்டியிட 40 சதவீத டிக்கெட் பெண்களுக்கு வழங்கப்படும் என நாங்கள் ஏற்கனவே அறிவித்து இருந்தோம். தற்போது இதை 50 சதவீதமாக உயர்த்தி இருக்கிறோம். இதன் மூலம் அரசியலில் பாலின சமத்துவமின்மையை நாங்கள் நீக்க உள்ளோம்.

50 சதவீதம் வரை பெண்களை வேலைக்கு அமர்த்தும் வணிக நிறுவனங்களுக்கு வரி விலக்கு மற்றும் உதவி வழங்கப்படும். பெண் தொழில்முனைவோருக்கு கடன், வரிச்சலுகை போன்றவை வழங்கப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பெண்களுக்கு 40 சதவீத இடஒதுக்கீடு மற்றும் 50 சதவீத ரேஷன் கடைகள் பெண்களைக்கொண்டு நடத்துதல் போன்ற வாக்குறுதிகளும் வழங்கப்பட்டு உள்ளன.

மேலும் மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்கள், பட்டதாரி பெண்களுக்கு இருசக்கர வாகனம், பெண்களுக்காக 75 திறன் மேம்பாட்டு பள்ளிகள், பெண்களே நடத்தும் மாலை நேர கல்வி மையம் போன்ற திட்டங்களையும் காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளும்” என்று பிரியங்கா காந்தி கூறினார்.