காதல் தவெக மீதுதான்; ஆனால் கல்யாணம் திமுக கூட.. சொன்னது காங்கிரஸ் தலைவர்
தவெக மீதுதான் காதல். ஆனால் கல்யாணம் செய்துகொண்டது திமுகவை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தவெக மீது காதல்
காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன், தவெக தலைவர் விஜய் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரியில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசுகையில், "மாற்றத்திற்கான அரசியல், மாற்று அரசியலுக்கு தமிழ்நாட்டில் தேவை இருக்கிறது. அதை இட்டு நிரப்ப வந்தவர்கள் எல்லாம் தோற்றார்கள், தொலைந்தார்கள்.
அதிகாரத்தின் நிழல் படியாத ஒரு கட்சியாக இருக்கும் தவெக, நாளை அதிகாரத்திற்கு வரும் என்ற நம்பிக்கை நாட்டு மக்கள் மத்தியில் இன்று உதயமாகி இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தோடு கூட்டணி வைக்க பல கட்சிகள் ஆசைப்படுகின்றன.
நாஞ்சில் சம்பத் தகவல்
காங்கிரஸ் கட்சிக்கும் அந்த ஆசை இருக்கிறது. நான் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் என் பக்கத்து இருக்கையில் இருந்தார். அவரிடம் நீங்கள் தவெக உடன் கூட்டணிக்கு முயற்சிக்கிறீர்களா என்று கேட்டேன்.
அதற்கு அவர் சொன்னார், "எங்களுக்கு தவெகவின் மீதுதான் காதல். ஆனால் கல்யாணம் செய்துகொண்டது திமுகவை" என்று அவர் வருத்தத்துடன் என்னிடம் சொன்னார். எல்லாக் கட்சிகளும் தவெக எனும் நந்தவனத்துக்கு வருவதற்கு நாள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மிகப்பெரிய ராஜதந்திரி விஜய். அவர்கள் திருவண்ணாமலையில் திமுக இளைஞர் அணி வடக்கு மண்டல மாநாடு நடத்துகிற அன்றைக்கு, அரசியலில் 1000 பிறை கண்ட அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையனை தவெகவில் இணைத்ததன் மூலம் திமுக மண்டல மாநாடு பற்றி யாரும் எதுவும் பேசவில்லை என தெரிவித்துள்ளார்.