துணை முதல்வர் ஆகிறாரா உதயநிதி? - மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கும் காங்கிரஸ் பிரமுகர்
திமுக இளைஞரணி செயலாளாரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமாகிய உதயநிதி ஸ்டாலினை தமிழகத்தின் துணை முதல்வராக ஆக்க வேண்டுமென காங்கிரஸ் கட்சியின் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக இளைஞரணி செயலாளாளராக உள்ள உதயநிதி ஸ்டாலின் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார். அவருக்கு தமிழக அமைச்சரவையில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உதயநிதியின் ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகியான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
ஆனால் அமைச்சரவையில் இடம் இல்லை என்றாலும் அனைத்து அமைச்சர்களும் தலைவரைப் போலவே வணங்கிச் செல்லும் அளவிலேயே உதயநிதி கருதப்படுகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உதயநிதி ஸ்டாலின் 234 தொகுதிகளையும் சொந்தம் கொண்டாடும் அளவுக்கு வர வேண்டும் என்றும், அவரது திறமையை ஒரு தொகுதியில் மட்டும் சுருக்கி விடக்கூடாது, ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் அவரும் , அவருக்கு உள்ள திறமைகளும் பயன்பட வேண்டும் என்பதால் அவரை அமைச்சராக வேண்டும் என முதல் குரல் எழுப்பினார்.
இந்த நிலையில் அதே போல அமைச்சர் சிவசங்கர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்வில் பேசும்போது , மூன்று முரை எம்.எல்.ஏ.வாக இருக்கும் தன்னால் கூட மக்கள் பணி செய்ய முடியவில்லை என்றும், சேப்பாக்கம் தொகுதியைக் உதயநிதி ஸ்டாலின் தரம் உயர்த்துவார் என்றும், ஸ்டாலின் வழியில் உதயநிதி ஸ்டாலின் செயல்படுவதாகவும், அவரை அமைச்சராக வேண்டுமெனவும் கூறினார்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் மட்டுமல்ல துணை முதலமைச்சராகவும் ஆக்க வேண்டும் என மீண்டும் குரல் எழுந்துள்ளது. இம்முறை திமுகவினர் இதனை சொல்லாமல் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
அக்கட்சியின் விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஆர்.எஸ்.ராஜன். திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதில் எல்லா மக்களும் விரும்பும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுப்பதை பொருத்தமானதாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.