தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறுமா? - செல்வப்பெருந்தகை பதில்
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறியிருக்கும் நிலையில், தவெக-வில் காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவை கிடைக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
தவெக அமைச்சரவையில் பங்கேற்பதா அல்லது வெளியிலிருந்து ஆதரவு தருவது என்பது குறித்து காங்கிரஸ் தலைமை பரிசீலித்து வருவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

கடந்த 4ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதில் 108 இடங்களில் தவெக வெற்றி பெற்றது.
ஆனால் ஆட்சியமைக்க 118 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதால், முதற்கட்டமாக 5 எம்.எல்.ஏ.க்களை வைத்திருந்த காங்கிரஸ் உடன் கூட்டணி சேர்ந்தது தவெக. இதற்காக மே 6-ல் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் கூட்டம் நடந்தது.
தொடர்ந்து அன்றைய தினமே அவசர அவசரமாக காணொலி மூலமாக நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸின் அரசியல் விவகார குழு கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவை வழங்குவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக ஆட்சி அமைக்க நிபந்தனையுடன் காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுப்பதாக அறிவித்தது.
அதேசமயம், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கும் வகையில் அமைச்சரவையில் காங்கிரஸூக்கு இடம் வழங்க வேண்டும், அதிமுக, பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஆதரவை பெறக்கூடாது என்று காங்கிரஸ் நிபந்தனை விதித்திருப்பதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் தவெக அமைச்சரவையில் பங்கேற்பதா அல்லது வெளியிலிருந்து ஆதரவு தருவது என்பது குறித்து காங்கிரஸ் தலைமை பரிசீலித்து வருவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தற்போது தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று (மே 8) செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுப்பது ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவம் என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து இவர் மேலும் பேசுகையில், திமுக கூட்டணியை விட தவெக கூட்டணியில் இருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், ஆட்சியில் பங்கு பெறும் போது எல்லா கட்சிகளும் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
ராகுல் காந்தி - ஸ்டாலின் உடன் இணைந்து பிரச்சாரம் செய்வதை தவிர்க்கவில்லை. காங்கிரஸ் கட்சி எந்தக் கூட்டணியில் இருந்தாலும் நாங்கள் மகிழ்ச்சியாக தான் இருப்போம். ஆனால் ஆட்சியில் பங்கு கிடைத்தால், எல்லோரும் மகிழ்ச்சியாக தானே இருப்போம் என குறிப்பிட்டுள்ளார்