திமுக - காங்கிரஸ் கூட்டணி இழுபறிக்கு காரணம் என்ன? ஓர் அலசல்

tamilnadu dmk stalin Rahul Gandhi
By Jon Mar 06, 2021 10:56 AM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு தீர்வு எட்டப்படாமலே இழுபறியில் நீடித்து வருகிறது. அதிகமான இடங்கள் கேட்கும் காங்கிரஸ், குறைவான இடங்கள் தருவதற்கே தயாராக இருக்கும் திமுக என கூட்டனி முறியும் நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதற்கான காரணங்களை சற்று விரிவாக பார்ப்போம்.

தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே கூட்டணி அரசு, கூட்டாச்சியை அறிமுகப்படுத்தியது தமிழகமும், திமுகவும் தான். திமுக - காங்கிரஸ் கூட்டணி இந்திய அரசியலில் பழமையான கூட்டணிகளுள் ஒன்று, அது பல பரிமாணங்களைச் சந்தித்துள்ளது. 1967-ல் காங்கிரஸை வீழ்த்தி தான் திமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது தொடங்கிய திராவிட கட்சிகளின் ஆட்சி தற்போது வரை நீடித்து வருகிறது.

ஆனால் எந்த காங்கிரசை வீழ்த்தி திமுக ஆட்சிக்கு வந்ததோ அதே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து தேசிய அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்தது. அப்போதைய காங்கிரசுக்குள் பிரதமர் இந்திரா காந்தியின் செல்வாக்கு அதிகமாக கட்சி இரண்டு குழுக்களாக பிரிந்தது. 1969-ம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் ஒரு வேட்பாளரை நிறுத்தியது.

ஆனால் இந்திரா காந்திக்கு அதில் உடன்பாடு இல்லை. இந்திரா காந்தி ஆதரவு பெற்ற விவி கிரி சுயேட்டையாக போட்டியிட்டார். காங்கிரஸ் ஆதரவையும் மீறி விவி கிரி தான் வெற்றி பெற்றார். அதற்கு திமுக மிக முக்கிய பங்கு வகித்தது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. அப்போது இந்திரா காங்கிரஸை திமுக ஆதரித்தது.

1971 பொதுத் தேர்தலில் திமுக - இந்திரா காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. இந்திரா காந்தி தன்னுடைய செல்வாக்கை நிலைநிறுத்தவதில் திமுக மிக முக்கிய பங்காற்றியது. ஆனால் அந்த இணக்கம் எமெர்ஜென்சியில் காணாமல் போனது. கருணாநிதி ஆட்சியை டிஸ்மிஸ் செய்தார் இந்திரா காந்தி. பின்னர் 1977 தேர்தலைச் சரிவை சந்தித்த காங்கிரஸ் 1980-ல் மீண்டும் திமுக உடன் கூட்டணி வைத்தது.

அனால் இந்த கூட்டணியும் நீண்ட காலம் நிலைக்கவில்லை. அப்போது பிரிந்த காங்கிரஸ் - திமுக 24 ஆண்டுகள் கழித்து 2004-ல் தான் நேரடியாக மீண்டும் கூட்டணி வைத்தது. 2004-ல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர திமுக முக்கிய பங்காற்றியது. அதற்குப் பிறகு அனைத்து சட்டமன்ற தேர்தல்களையும் திமுக - காங்கிரஸ் இணைந்தே சந்தித்தன.

ஆனால் காங்கிரஸின் செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்து வருவதாக திமுக உணர்கிறது. தற்போது காங்கிரஸுக்கு குறைவான இடங்கள் ஒதுக்க திமுக கூறும் காரணங்களுள் ஒன்று காங்கிரசுக்கான வெற்றி வாய்ப்பு சதவிகிதம். கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 63 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வென்றது.

2016 தேர்தலில் திமுக கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 8 இடங்களில் மட்டுமே வென்றது. நடந்து முடிந்த பீகார் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் ஒதுக்கியது தான் கூட்டணியின் தோல்விக்கு காரணமாகச் சொல்லப்படுகிறது. காங்கிரஸ் வாக்கு வங்கி மேலும் 2011 மற்றும் 2016-ல் திமுக கூட்டணியில் குறைவான கட்சிகளே இருந்தன.

தற்போது திமுக கூட்டணியில் அதிக அளவிலான கட்சிகள் இருப்பதும் இடங்களைப் பகிர்வதில் சிக்கலாக கூறப்படுகிறது. கடந்த 54 ஆண்டுகளில் காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது கிடையாது. 2014-ம் ஆண்டு காங்கிரஸ் தனித்து போட்டியிட்ட போது வெறும் 4.3% வாக்குகளை மட்டுமே காங்கிரஸ் பெற்றிருந்தது.

எனவே காங்கிரஸ் கட்சிக்கென்று தனித்த வாக்கு வங்கி தமிழகத்தில் மிகவும் குறைவு, தனித்து காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியாது, கூட்டணியில் காங்கிரஸ் தான் திமுகவை அதிகம் சார்ந்திருப்பதாக திமுக வாதிடுகிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் வேறுபாடு கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போதும் புதுச்சேரி சேர்த்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கும் 10 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அப்போது திமுக காங்கிரஸுக்கு அதிக இடங்கள் ஒதுக்கியதாக விமர்சனஙள் எழுந்தன.

ஆனால் நாடாளுமன்ற தேர்தல் என்பதால் தேசிய கட்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக காங்கிரசுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஜார்கண்டிலும் இதே நடைமுறை தான் கையாளப்பட்டது. அங்கே ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா என்கிற மாநில கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் போட்டியிட சட்டமன்ற தேர்தலில் ஜே.எம்.எம் அதிக இடங்களில் போட்டியிட்டது.

தனிப்பெரும்பான்மை மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது கிடையாது. கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தாலும் திமுக, அதிமுக மட்டும் தான் ஆட்சி செய்யும் அமைச்சரவையில் இடம்பெறும். கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஒவ்வொருமுறை ஆட்சியில் இருந்தபோதும் இரு கட்சிகளும் தனிப்பெரும்பான்மை உடன் தான் ஆட்சி செய்துள்ளன.

இதற்கு விதிவிலக்கு 2006 மட்டுமே. திமுக 96 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது, தனிப்பெரும்பான்மை பெறவில்லை. அந்த ஆட்சிக் காலம் முழுதும் மைனாரிட்டி திமுக அரசு என்றே ஜெயலலிதா விமர்சித்து வந்தார். எனவே ஆட்சிக்கு தேவையான இடங்களை திமுக தனித்தே பெற வேண்டும் என்கிற முடிவில் இருக்கிறது. இதனால் 170 - 180 இடங்களில் போட்டியிட திமுக முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் - திமுக பேச்சுவார்த்தை இன்னும் இழுபறி நிலையிலே உள்ளன. இந்நிலையில் அடுத்த கட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பது பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.