காங்கிரஸை கழட்டிவிட முயற்சிக்கிறதா திமுக? தொடரும் இழுபறி
சட்டமன்ற தேர்தக் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான தேதி நெருங்கிவிட்ட நிலையில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. திமுக 20 தொகுதிகள் வரை கொடுக்க தயாராக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் காங்கிரஸ் 30க்கும் மேல் தொகுதிகளை கேட்டதாக தகவல் வெளியானது.
அதனைத் தொடர்ந்து திமுக 23 தொகுதிகளை வரை கொடுக்க முன்வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் ஒரு உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில் தொகுதி எண்ணிக்கை ஒரு புறம் இருக்க திமுக நடத்தும் விதம் வருத்தம் அளிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்ணீர் சிந்தியதாக தகவல் வெளியானது. கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு 41 தொகுதிகளை திமுக ஒதுக்கீடு செய்தது.
ஆனால் காங்கிரஸ் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த முறை நடந்து முடிந்த மற்ற மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால் திமுக அதிக இடங்களை ஒதுக்குவதில் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.
அப்போது அவர் திமுக நிர்வாகிகளிடம் புதுச்சேரியில் காங்கிரஸ் இல்லாமல் தனித்து போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு புதுச்சேரி திமுக நிர்வாகிகள் தனித்து நின்றாலும் வெற்றி வாய்ப்பு அமோகமாக இருக்கிறது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் இல்லாலம் களம் காண திமுக ஆலோசித்து வருகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.