அதிக தொகுதிகள் கேட்டு அடம் பிடிக்கும் காங்கிரஸ் - வாய்ப்பை எதிர்பார்க்கும் ராமதாஸ்
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு ஆகிய விசயங்களில் அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளன.
அதிக தொகுதிகள் கேட்கும் காங்கிரஸ்
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து வந்தாலும், அதிக சீட்கள் வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ், 1967 தேர்தலில் அண்ணா தலைமையிலான திமுகவிடம் ஆட்சியை இழந்த பிறகு, தற்போது வரை மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லை.

அதன் பிறகு, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே தேர்தலை சந்திக்கும் நிலை உள்ளது.
அதேவேளையில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் மற்றொரு தேசிய கட்சியான பாஜகவின் வாக்கு விகிதம் காங்கிரஸை விட அதிகரித்துள்ளது.
தற்போது கட்சியை வளர்க்கும் நோக்கில், காங்கிரஸ் கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு, ராஜ்ய சபா தொகுதிகள் ஆகிய கோரிக்கைகளை காங்கிரஸ் தலைவர்கள் முன்வைத்து வருகின்றனர்.
ஆனால் திமுக ஆட்சியில் பங்கு வழங்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளது. அதே போல் நாம் இருப்பதால் தான் இந்தியா கூட்டணியே வலுவாக உள்ளதாக திமுக பேசியுள்ளது.

சில காங்கிரஸ் நிர்வாகிகள் விஜய்யின் தவெக கூட்டணியில் இணைய வேண்டும் எனவும் பேசி வருகின்றனர்.
இந்த நிலையில், கூடுதல் தொகுதி கோரிக்கைகாக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகினாலும் எந்த பாதிப்பும் இல்லை என்ற நிலைப்பாட்டில் திமுக உள்ளது.
காத்திருக்கும் ராமதாஸ்
காங்கிரஸ் விலகுவதால் போகும் வாக்குகளை தேமுதிக மற்றும் ராமதாஸ் தரப்பை கூட்டணியில் இணைப்பதன் மூலம் சரிகட்டி விடலாம் என்ற திட்டத்தில் திமுக உள்ளது.

தேமுதிக உடன் கூட்டணியை இறுதி செய்யும் நிலையில் உள்ளதால், விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், அன்புமணி ராமதாஸ் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், ராமதாஸ் தரப்பு திமுக கூட்டணியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

தேமுதிக உடனான பேச்சுவார்த்தை நிறைவடைந்த பின்னர், திமுக பேச்சுவார்த்தையை தொடங்கும் ராமதாஸ் காத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வெகுவிரைவில் திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும் என கனிமொழி தெரிவித்துள்ளார்.