ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டி - ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியா?

Indian National Congress Tamil nadu DMK Erode
By Thahir Jan 20, 2023 02:05 AM GMT
Report

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்த நிலையில், இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் அறிவிப்பு 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் கடந்த 4ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு திருமகன் ஈவெரா காலமானார்.

இதனிடையே இந்த தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் என காங்கிரஸ் கட்சி தமிழக மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.

Congress contest in Erode East by-election

இதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கே.எஸ்.அழகிரி மற்றும் திருநாவுக்கரசர் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் சந்தித்து பேசினர். இதையடுத்து இடைத்தேர்தலில் ஈரோடு கிிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு 

இது தொடர்பாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2023-ம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 27-ம் நாள் தமிழகத்தில் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலையொட்டி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணித் தலைவர்களுடன் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து பேசி, ஏற்கெனவே 2021-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் அத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றக் காரணத்தால், தற்போது இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கீடு செய்வதென முடிவெடுக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.