புதுச்சேரியில் வெற்றிக்கு பிறகும் தொடர்ந்து நீடிக்கும் குழப்பம்.! யார் முதல்வர் ஆவார்?
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் - அதிமுக - பாஜக கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தன.
இதில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றன. அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
30 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட புதுச்சேரியில் ஆட்சி அமைக்க தேவையான 16 இடங்களை என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி பெற்றுள்ளது.
மேலும் ஆறு சுயேட்சை எம்.எல்.ஏக்களில் ஐந்து பேர் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தான் முதல்வர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது பாஜக முதல்வர் பதவியை கேட்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
காங்கிரசிலிருந்து விலகி பாஜக சார்பாக போட்டியிட்டு வென்ற நமச்சிவாயத்தை முதல்வராக்க பாஜக முயல்வதாக தெரிகிறது.
கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் கூடி முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வார்கள் என பாஜக தெரிவித்திருந்தது. ஆனால் தன்னுடைய தலைமையில் தான் புதுச்சேரியில் ஆட்சி அமையும் என ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
இதனால் பெரும்பான்மை இடங்களில் வென்ற புதுச்சேரி அரசியல் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் - காங்கிரஸ், திமுக உடன் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற குரல்களும் எழுந்துள்ளன. இதனால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.