இந்திய அணியில் தோனி இணைவதில் சிக்கல் - எமனாக அமைந்த சிஎஸ்கே அணி

Bcci MSDhoni T20 worldcup Team India squad
By Petchi Avudaiappan Sep 10, 2021 01:25 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் ஆலோசகராக தோனி செயல்படுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக இந்தாண்டுக்கான டி20 உலகக்கோப்பை திட்டமிட்டபடி இந்தியா சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் , இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது சமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த உலகக்கோப்பை தொடரின் போது ஆலோசகராக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

மத்திய பிரதேச கிரிக்கெட் வாரியத்தின் வாழ்நாள் உறுப்பினரான சஞ்சீவ் குப்தா பிசிசிஐ-க்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி செயல்படுவதை நிறுத்த வேண்டும்.

அந்த முடிவை கைவிட வேண்டும். ஏனென்றால் தோனி ஏற்கனவே ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். எனவே உத்தரவை ரத்து செய்யுங்கள் எனக் கூறியுள்ளார். மேலும் பிசிசிஐயின் விதிமுறைகளில் 38 (4)-ன் படி ஒருவர் ஒரே நேரத்தில் 2 பதவிகளை வகிக்கக்கூடாது.

தோனி சிஎஸ்கே அணியின் கேப்டனாகவும், இந்திய அணி ஆலோசகராகவும் செயல்பட முடியாது. எனவே பிசிசிஐ-ன் அபெக்ஸ் கவுன்சில் இதனை விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என சஞ்சீவ் குப்தா குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் சஞ்சீவ் குப்தா கடந்த காலங்களில் இதுபோன்ற பல புகார்களை வீரர்களுக்கு எதிராக அளித்துள்ளதால் இதனை பிசிசிஐ அபெக்ஸ் கவுன்சிலின் சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.