சத்தமாக பாட்டு போட்டதால் தகராறு...தாக்கிக்கொண்ட திமுக - பாஜகவினர்!
கோவில் கோடைவிழாவில் சத்தமாக பாட்டு போட்டதால் திமுக நகர துணைத் தலைவரும், பாஜக நிர்வாகியும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் திருவிழாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாட்டு போட்டத்தில் தகராறு
ஸ்ரீவில்லிப்புத்தூர் நகராட்சிக்குட்பட்ட 17-வது வார்டு பகுதியான ஊரணிப்பட்டியில் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது.
இந்த கோவிலின் நாட்டாமையாக அப்பகுதியை சேர்ந்த பாஜக ஓ.பி.சி அணியைச் சேர்ந்த சிவபிரகாசம் செயல்பட்டு வருகிறார். இக்கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு ஆடிக்கொடை விழா நடந்து வருகின்றது.
விழாவின் கடைசி நாளான நேற்று, முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வந்துள்ளது. அதற்காக கோவிலின் அருகிலுள்ள தெருவில் சவுண்ட் ஸ்பிக்கர்கள் கட்டி பாடல்கள் இசைக்கப்பட்டு வந்துள்ளது.
அதே நேரத்தில் தான், தமிழகத்தில் வழங்கப்படவுள்ள மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கும் பணியும் நடைபெற்று வந்துள்ளது.
வாக்குவாதம்
இந்த பணியை அப்பகுதி தி.மு.க கவுன்சிலரும், நகர்மன்ற துணைத் தலைவருமான செல்வமணி தொடங்கிவைத்து, பொது மக்களிடையே அதனை குறித்து விவரித்து பேசி கொண்டிருந்திருக்கிறார்.
செல்வமணி பேசிக்கொண்டிருந்த வேலையில், ஸ்பீக்கர் சத்தம் அதிகமாக இருந்துள்ளதால் செல்வமணியால் சரிவர பேசமுடியவில்லை. இதன் காரணமாக அவர் கோவிலுக்கு நேரில் சென்று ஸ்பீக்கர்களை நிறுத்தியுள்ளார்.
இதனால் அங்கிருந்த கோவில் நிர்வாகிகள் மற்றும் பாஜகவை சேர்ந்த சிவபிரகாசம் மிகவும் கோவமடைந்துள்ளார். இதன் காரணமாக இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாகவே சிவபிரகாசம் மற்றும் திமுகவின் செல்வமணிக்கும் அந்த பகுதியில் பேனர் வைப்பது போன்றவற்றில் தகராறு இருந்து வருகிறது.
ஒருவரையொருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு
வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு தரப்பினர் சார்பிலும் ஆட்கள் கூட ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து அந்த இடத்திற்கு விரைவதற்குள், தாக்குதலில் திமுகவின் செல்வமணி மற்றும் பாஜகவின் சிவப்பிரகாசம் இருவரும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் போலீஸாரின் பாதுகாப்புடன் முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சி நடந்து முடித்துள்ளது.
கோவில் விழாவில் ஸ்பீக்கரில் பாட்டு போட்டதன் காரணமாக திமுக மற்றும் பாஜக நிர்வாகிகளிடையே கைகலப்பு நடைபெற்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.