"கண்ட கருமத்துக்கெல்லாம் டிக்கெட் தர முடியாது" - மாணவியை நடுவழியில் இறக்கிவிட்ட கண்டக்டர்!
பேருந்தில் இசைக் கருவிகளுடன் ஏறிய மாணவியை நடுவழியில் இறக்கிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவி
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் ரஞ்சிதா. இவர் சீதபற்பநல்லூர் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படிக்கிறார்.
இவர் கல்லூரியில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அதற்காக டிரம்ஸ், தோள்பறை இசைக் கருவிகளையும் எடுத்து வந்துள்ளார். கல்லூரியில் நிகழ்ச்சி முடிந்து மதுரைக்கு செல்லும் பேருந்தில் இசைக் கருவிகளுடன் எறியுள்ளார்.
இதனை பார்த்த அந்த பேருந்தின் நடத்துநர் மாணவியிடம் சென்றார். அப்போது அவர், "பேருந்தில் மக்கள் பயணிக்க மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது, மற்ற பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை" என கறாராக பேசியுள்ளார்.
உடனே மாணவி இசைக் கருவிகளுக்கு வேண்டுமானால் லக்கேஜ் டிக்கெட் எடுப்பதாக மாணவி கூறினார். ஆனால் இதை கன்டக்டர் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.
கண்டக்டர் செய்த காரியம்
இதனை தொடர்ந்து, அந்த கண்டக்டர் மாணவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், "கண்ட கருமத்துக்கெல்லாம் டிக்கெட் தர முடியாது. இப்போ பஸ்ல இருந்து இறங்குறியா இல்லை இதையெல்லாம் தூக்கி எறியட்டுமா" என கேட்டுள்ளார்.
உடனே அந்த மாணவி இரவு நேரத்தில் இறக்கிவிட்டால் எப்படி என்று கேட்டபோது அவர், "இதையெல்லாம் தூக்கிகிட்டு ஏறும் போதே யோசிச்சிருக்கணும் நீ இறங்கு" என கூறி அந்த மாணவியை வண்ணாரப்பேட்டை அருகே இறக்கிவிட்டுள்ளார்.
இதனால் அழுது கொண்டே இறங்கிய மாணவியை அங்கிருந்த தன்னார்வலர்கள் அரைமணி நேரம் பாதுகாப்பாக இருந்து வேறு பேருந்து வந்ததும் அவரை அதில் ஏற்றிவிட்டனர்.
இதனால் ஒரு பொறுப்பான அரசு ஊழியராக நடந்து கொள்ளாமல் ஏதோ பேருந்து அவர் குடும்பச் சொத்து போல் நடந்து கொண்டது கண்டித்தக்கது என்று மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.