“இனிமேல் இப்படி பேச மாட்டேன்’ - பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவிற்கு ஜாமீன்
அரசியல் தலைவர்களை விமர்சித்து பேசிய வழக்கில் சிறையிலிருக்கும் அருட்தந்தை ஜார்ஜ் பொன்னையாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை ஜார்ஜ் பொன்னையா, அருமனையில் கடந்த மாதம் 18-ம் தேதி கிறிஸ்தவ, இஸ்லாமியக் கூட்டமைப்பு சார்பில் பழங்குடியின மக்களுக்காகப் போராடி உயிரிழந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பேசும்போது, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, மாநில அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் ஆகியோரை கடுமையாக விமர்சித்து பேசினார்.
இதன் வீடியோசமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி ஜார்ஜ் பொன்னையா மீது அருமனை போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ஜார்ஜ் பொன்னையா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதில் ஜூலை 18 ஆம் தேதி அருமனை பகுதியில் கிறிஸ்தவ, இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் பழங்குடியின மக்களுக்காக போராடி உயிரிழந்த அருட்தந்தை ஸ்டேன் ஸ்வாமியின் இறப்பிற்கான கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் பேசியபோது அரசியல் தலைவர்களை விமர்சித்து பேசியதாகவும், பூமி தாயை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகவும் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 18ஆம் தேதி நடைபெற்ற கூட்டம் முறையாக காவல் ஆணையரின் அனுமதி பெற்று நடைபெற்றது. நான் பேசிய விவரங்கள் வேண்டுமென்றே குறிப்பிட்ட பகுதிகள் மட்டும் தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் பரப்பப்பட்டுள்ளது. இதற்கு வருத்தம் தெரிவித்து ஜூலை 20ஆம் தேதி மற்றொரு வீடியோவையும் வெளியிட்டுள்ளேன்.
இதயநோய் உட்பட பல்வேறு உடல் உபாதைகளுடன், வயது முதிர்வாகவும் இருப்பதால் அவற்றைக் கருத்தில் கொண்டு எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது ஜார்ஜ் பொன்னையா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் லஜபதிராய் தவறான நோக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சில கருத்துக்கள் மட்டும் பரப்பப்பட்டுள்ளன.
மனுதாரர் வயது முதிர்ந்தவராகவும், இதயநோயாளியாகவும் இருப்பதால், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். இதையடுத்து நீதிபதி மனுதாரர் வயது முதிர்ந்தவராகவும், இதய நோயாளியாகவும் இருப்பதால் அதனை கருத்தில் கொண்டு அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது.
ஆனால் வரும் காலங்களில் மனுதாரர் இதுபோல மதம் மற்றும் அரசியல் பிரச்சனைகளை தூண்டும் வகையிலோ, அமைதியை குலைக்கும் வகையிலோ பேசக்கூடாது. ஆகவே ‘இவ்வாறு நடந்து கொள்ள மாட்டேன்’ என மனுதாரர் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். திருச்சி தில்லைநகர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகள் விதித்து ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.