அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றம் : எடப்பாடி பழனிசாமி
அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தீர்மானம் நிறைவேற்றம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதா குறித்து அவதூறாக ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளதாக, அதிமுகவின் பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் அண்ணாமலைக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கண்டன தீர்மானம்
இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நற்பெயரை கெடுக்கும் வகையில் அண்ணாமலை, ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பல்வேறு கட்சிகளின் மூத்த தலைவர்கள், மற்ற மாநில முதலமைச்சர்கள் உட்பட ஜெயலலிதா அவர்கள் மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் வைத்திருந்தனர். நம் பிரதமர் மோடி, ஜெயலலிதா மீது மரியாதையை கொண்டிருந்தார்.
ஆனால் அரசியல் அனுபவம், முதிர்ச்சி இல்லாத அண்ணாமலை, ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்நோக்கத்துடன், அவதூறாக பொறுப்பற்ற முறையில் பேசியுள்ளார், இதற்கு மாபெரும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இது அதிமுக தொண்டர்கள் இடையே வேதனையும், மனஉளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.